Saturday, December 27, 2008

பேராசிரியர்.பெரியார்தாசன், தோழர்.அழகரசன் நிகழ்ச்சி


பெரியார் திராவிடர் கழக தலைவர்கள் தோழர்.பேரா.பெரியார்தாசன் அவர்களும், தோழர்.கடலூர் அழகரசன் அவர்களும் அண்மையில் குவைத்திற்கு வருகைபுரிந்தனர்.
தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் அழைப்பின் பேரில் தோழர்.பெரியார்தாசனும், அவரோடு இணைந்து சொந்த விருப்பத்தின் பேரிலும், தோழர்.வடலூர் ஆறுமுகத்தின் ஆதரவிலும் தோழர்.அழகரசனும் வந்திருந்தனர். இப்பயணத்தின் போது இவர்களிருவரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், தமிழோசை கவிஞர் மன்றம், பெரியார் நூலகம், மற்றும் நமது தமிழர் சமூகநீதி பேரவையின் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
01.09.08 அன்று மாலை குவைத் வந்தடைந்த இவர்களை இவ்வமைப்பினர் அனைவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
02.09.08 அன்று தமிழ்நாடு பொறியாளர் குழும நிகழ்ச்சியிலும்,
03.09.08 அன்று காலை தமிழோசை கவிஞர் மன்ற கூட்டத்திலும் பங்கேற்றப்பின்னர்,
03.09.08 அன்று வெள்ளிக்கிழமை மாலை, மிர்காப் தஞ்சை உணவகத்தில் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாடினார். இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் வரவேற்றார்.
இதையடுத்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் "இணைந்தோம் உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்" என்ற பாடலை பாடினார். அடுத்ததாக, முன்னிலை வகித்த தோழர். வளநாடன் அவர்கள் உரையாற்றினார், பின்னர் தோழர்.சுப்பிரமணியன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார்.
அவரைத் தொடர்ந்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்கள் உரையாற்ற, தோழர். இராமகிருட்டிணன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார். இதையடுத்து தொழர்.சரவணன் அவர்கள் தான் இயற்றிய பெரியார் பற்றிய கவிதயை படித்தப் பின்னர் தலைமையுரையாற்றினார்கள்.
அதயடுத்து, பொறியாளர் முத்துக்குமார் அவர்கள் த.ச.பேரவையின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 என்ற தமிழக அரசால் வெளியிடப்பட்ட கையேட்டினை வெளியிட தோழர்கள் பெரியார்தாசனும் அழகரசனும் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து தோழர்.கடலூர்.அழகரசன் அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்து தோழர்.செந்தில்குமார் ஒரு எழுச்சிப் பாடலை பாடினார். நிறைவாக தோழர்.பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் உரையாற்றினார்கள்.
அடித்ததாக, விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தோழர்கள் .தமிழ்நாடன், அனவர் அலி, இரா.க.சரவணன், நாஞ்சில் சுரேசு ஆகியோர் தொழர்கள். அழகரசன், பெரியார்தாசன் இருவருக்கும் நினைவுப்பரிசினை வழங்கினர். இதயடுத்து, இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர். மரு.அன்வர் பாட்சா அவர்களும், தோழர்.முபாரக் ரசுவி அவர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.
தமிழ்.காம் இதழின் சார்பில் தோழர். லுக்மான் அவர்கள் பேரா.பெரியார்தாசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்கள்.
ஓவியர். கொண்டல்ராசு அவர்கள், நிகழ்ச்சியினிடையே தோழர் அழகரசன் அவர்களை ஓவியமாக வரைந்து பரிசளித்தார்கள்.
விருந்தினர்களோடு அனவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, இரவு உணவையும் முடிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

பெரியார் பிறந்தநாள் விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்:

பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, உலகில் அனைவரும் பயன்பெற வழிவகை செய்ய தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தமிழக அரசின் சார்பில் தொகுத்து ஒரே தொகுப்பாக வெளியிட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இத்தொகுப்பின் மலிவு விலையில் வெளியிடுவதோடு மின்னூல் வடிவத்திலும் வெளியிடவேண்டும்.

பெரியார் பயன்படுத்திய உடைமைகள் அனைத்தையும் அரசு தன் பொறுப்பில் எடுத்து, தனி ஒரு கண்காட்சி கூடமும் நினைவகமும் ஏற்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

மதசார்பற்ற அரசு சனநாயக அரசு என்றெல்லாம் கூறிக்கொள்ளும் இந்தியாவில், தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், சிறுபான்மையினரின் வாழ்விற்கான அச்சுறுத்தல்கள் தொடர்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சாதாரன, சிறுபான்மை, பிந்தங்கிய மக்களுக்கு எதிரான கொடுமைகளை நாட்டின் முதன்மைப் பிரச்சனையாக கருதி குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நேரடியாக தலையிட்டு அம்மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை ஈடுகட்டுவதோடு அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்மொழி மீட்டுருவாக்கம், தமிழர் நலம், தமிழர் பண்பாடு போன்றவற்றை முன்னிருத்தி பிற தொலைக்காட்சிகளைப் போன்று தமிழர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லாமல், மண் பயனுற வேண்டும் என்ற நோக்கிலே தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் தொலைக்காட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றதை பாராட்டுகிறோம். அதே வேளையில், எந்த நிலையிலும் தனது நோக்கத்திலும் செயலிலும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடம் தராமல், தவறுகள் குறைபாடுகள் ஏற்படின் அவற்றை களைந்து தொடர்ந்து செயல்பட வலியுருத்துகிறோம்.

தமிழர் சமூகநீதி பேரவையின் சின்னம்


Tuesday, November 4, 2008

பெரியார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்


தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா 06.09.08 அன்று "சமூகநீதி போராளி தந்தை பெரியார்" அரங்கில் (இந்தியன் முகலாய் உணவகம், பாகீல்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

த.ச.பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் வரவேற்புரை ஆற்றினார்கள். எழுத்தாளர் வளநாடன் தலைமையேற்க, த.ச.பேரவையின் இணைச்செயலாளர் க.இரகமத்துல்லா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நிலவனும் பட்டுக்கோட்டை சத்யாவும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அதைத் தொடர்ந்து, க.இரகமத்துல்லா அவர்கள் த.ச.பேரவையின் சின்னத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.

அவரைத்தொடர்ந்து வடலூர் ஆறுமுகம் அவர்கள் பெரியார் சிறப்புக்களை விளக்கும் விதமாக உரையாற்றினார்.

அடுத்ததாக, இரா.க.சரவணன் அவர்கள் த.ச.பேரவையின் கொள்கை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு உரையாற்றினார். கொள்கை விளக்க கையேட்டினை பெற்றுக் கொண்டு பேராசிரியர். தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
பிறகு, உமைரி நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழக தலைவருமாகிய பேராசிரியர், முனைவர். சவாகிருல்லா அவர்களுக்கு த.ச.பேரவையின் தலைவர் தமிழ்நாடன், புலவர்.கருணனந்தம் எழுதிய பெரியார் வரலாற்று நூலை நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சமூகநீதிக் காவலர் பெரியார் என்ற தொகுப்பு நூலை த.ச.பேரவையின் அவைத் தலைவர் அன்வர் அலி வெளியிட, பேரா.முனை. சவாகிருல்லா பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

விழா நிறைவாக த.ச.பேரவையின் பொருளாளர் நாஞ்சில் சுரேசு நன்றியுரை ஆற்றினார்.

முன்னதாக த.ச.பேரவையின் துணைத்தலைவர் வயி.பி.மதியழகன் சிற்றிதழ்கள் கண்காட்சியினையும், த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் பெரியார் ஆவணக் கண்காட்சியினையும் திறந்து வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஏராளமான சிற்றிதழ்களும், பெரியார் நூல்களும், பெரியார் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழாவினை நிலவன் சிறப்பாக தொகுத்தளிக்க இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : பேரா.முனை.சாவாகிருல்லா உரையும், கண்காட்சி விபரங்களும் தனியே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 4, 2008

சிறப்புக்கருத்தரங்கம் - 06.09.08


பேராசிரியர், முனைவர்.ஜவாகிருல்லா கலந்துகொள்ளும் சிறப்புக்கருத்தரங்கம் 06.09.08 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்.

Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்க தீர்மானங்கள்

தீர்மானங்கள்

முதல் அமர்வு: மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்

ஆங்கிலேய அரசை அவர்களிருந்த கோட்டைக்குள்ளேயே எதிர்த்து புரட்சி விதையை விடுதலை உணர்வை முதன் முதலாக விதைத்த “வேலூர் புரட்சியை” தமிழகத்தில் நடைபெற்ற பிற விடுதலைப் போரை போன்றே வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப்படுள்ளதை மாற்றி முறையான வரலாற்றுப் பதிவை செய்திட ஆவண செய்யுமாறு மைய மாநில அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே உலகத்தினருக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டய் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் புரட்சியாளர் “உலக சமூகநீதி காவலர்” நெல்சன் மண்டேலா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாம் அமர்வு: கல்வி முறையும் களவு போகும் உரிமையும், தமிழ் மொழி மீட்டுருவாக்கம்

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தும் தமிழ் வழி மருத்துவப் பாட திட்டங்களையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் செயலுக்குவரும் தமிழ் வழி பொறியியல் பாடத்திட்டத்தினையும் ஆதரித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக தகுதியை தந்து கல்வியை வியாபார தொழிலாக்குவதை கண்டித்தும், அரசே மாவட்டத்தோறும் பல்கலைக்கழகங்களை உருவாக்கிட வலியுருத்தியும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

காமராசரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர் கொண்டுவந்த சென்னை அய்.அய்.டி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அவர் கண்ட கனவை நிறைவேற்றிடும் வகையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியும் மைய, மாநில அரசை வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுத் தீர்மானங்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், கொலை செய்வதையும் கண்டிப்பதோடு, தமிழக அரசும், நடுவண் அரசும் தக்க நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை காத்திட வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடைபெற்ற கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மை நிலையினை மக்கள் முன் விளக்கி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் ஓட்டெடுப்பும் நடத்திய பிறகே மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் முயற்சியால் தரமான இலவச பொதுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் வழங்கவும் நூலகம் ஆயவகம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட “பெரியார் ஈ.வே.இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை”யை வாழ்த்துவதோடு அதன் வளர்ச்சியில் பங்குபெறும் விதமாக அறக்கட்டளை வளர்ச்சி நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி தருவதாகவும் முடிவு செய்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்கம்

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்தமிழ் மொழி மீட்டுருவாக்கம்கல்வி முறை - களவுபோகும் உரிமைசிறப்புக்கருத்தரங்கம் த.ச.பேரவையின் அய்ந்தாவது சிறப்புக்கருத்தரங்கம் கல்வி போராளி காமராசர் அரங்கில் த.ச.பேரவையின் பொருளாலர் நாஞ்சில் சுரேசு வரவேற்புரையோடு துவங்கிற்று.
த.ச.பேரவையின்பொதுச்செயலாளர் இரா.க.சரவணன் தலைமையேற்க, பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினரும் து.செயலாளருமாகிய அன்வர் அலி முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக தோழர் நிலவனும் தொழர் பட்டுக்கோட்டை சத்யாவும் தமிழ்தாய் வாழ்துப்பாடினர். அதைத் தொடர்ந்து முதல் அமர்வான மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் துவக்கமாக தோழர் செந்தில் குமார் "இணைந்தோம் உலகத் தமிழராய் இணைந்தோம் என்ற உலகத் தமிழர் பண் பாடினார்.

த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் உலகபோராளி நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில்எழுச்சிமிக்க கவிதை படித்தார்.

இதையடுத்து த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். கி. திருமுருகன் "தில்லைச் சமரில் வென்றது தமிழ்" என்ற கையேட்டினை வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் தோழர். அழ.பாண்டிச்செல்வம் பெற்றுக் கொண்டார்கள்.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர். மணிவாசகம் அவர்கள் படிக்க அரங்கத்தின் பலத்த கரவொலியோடு நிறைவேற்றபட்டது.முதல் அமைவை நிறைவு செய்யும் விதமாகவும் இரண்டாம் அமர்வை தொடங்கும் விதமாகவும் தோழர் செந்தில் குமார் எழுச்சி மிக்க பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தோழர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் என்ற தலைப்பில்சீரிய உரையாற்றினார்கள். தமது உரையின் போது தமிழ் மொழி சிறக்கவும், தமிழ் மொழி சிறக்கவும் தமிழை மீட்டுருவாக்கம் செய்யவும் மறைமலையடிகள், செய்குத்தம்பி பாவலர், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆற்றிய தொண்டினையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் எடுத்துக் கூறினார்கள்.

தோழர் செந்தில்குமாரின் எழுச்சி மிக பாடலைத் தொடர்ந்துகருத்தரங்க வெளியீடாக தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். அப்துல் கனிவெளியிட இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அமைப்பாளர்மருத்துவர் அன்வர் பாசா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்துப் பேச வந்த த.ச.பேரவையின் தலைவர் தோழர் தமிழ்நாடன் அவர்கள் "கல்வி முறையும் களவு போகும் உரிமையும்" என்றதலைப்பில் இன்றைய கல்வி முறையின் சீர்கேட்டினையும், அதனை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தையும்எடுத்துக் கூறியதோடு தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தையும் விளக்கிக் கூறினார்கள்.

இக்கருத்தரங்கத்தின் சிறப்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முசுலிம் லீக்கின்அமைப்பாளர் தோழர். அன்வர் பாசா அவர்கள், காமராசர்அவர்கள் தமிழகத்திற்கும் தமிழர்களின் கல்விக்கும் ஆற்றியதொண்டினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.

இதையடுத்து தோழர் வித்யாசாகர் அவர்கள் பழங்குடிமக்களின் வாழ்வையும் வேதனைகளையும் தனது கவிதயின்மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை தோழர். நிலவன் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி நிறைவேற்றினர்.

இரண்டாம் அமர்வின் நிறைவாக தோழர் செந்திகுமார் அவர்கள்எழுச்சிமிகு பாடலை பாடினார்கள்.

நிறைவாக தோழர். இரா.க.சரவணன் கருத்தரங்கத்தின் பொதுத்தீர்மானங்களை நிறைவேற்றி, கறுப்பு சூலை, அணுசக்தி உடன்பாடு உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளை குறித்து சிறப்புர விளக்கி தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிற்றுண்டியும் கருத்தரங்க வெளியீடுகளும்வழங்கப்பட்டது.

தோழர் அன்வர் அலியின் நன்றியுரையோடு நிகழ்ச்சிகள் இனிதேநிறைவுற்றது.