Saturday, December 27, 2008

பெரியார் பிறந்தநாள் விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்:

பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, உலகில் அனைவரும் பயன்பெற வழிவகை செய்ய தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தமிழக அரசின் சார்பில் தொகுத்து ஒரே தொகுப்பாக வெளியிட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இத்தொகுப்பின் மலிவு விலையில் வெளியிடுவதோடு மின்னூல் வடிவத்திலும் வெளியிடவேண்டும்.

பெரியார் பயன்படுத்திய உடைமைகள் அனைத்தையும் அரசு தன் பொறுப்பில் எடுத்து, தனி ஒரு கண்காட்சி கூடமும் நினைவகமும் ஏற்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

மதசார்பற்ற அரசு சனநாயக அரசு என்றெல்லாம் கூறிக்கொள்ளும் இந்தியாவில், தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், சிறுபான்மையினரின் வாழ்விற்கான அச்சுறுத்தல்கள் தொடர்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சாதாரன, சிறுபான்மை, பிந்தங்கிய மக்களுக்கு எதிரான கொடுமைகளை நாட்டின் முதன்மைப் பிரச்சனையாக கருதி குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நேரடியாக தலையிட்டு அம்மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை ஈடுகட்டுவதோடு அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்மொழி மீட்டுருவாக்கம், தமிழர் நலம், தமிழர் பண்பாடு போன்றவற்றை முன்னிருத்தி பிற தொலைக்காட்சிகளைப் போன்று தமிழர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லாமல், மண் பயனுற வேண்டும் என்ற நோக்கிலே தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் தொலைக்காட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றதை பாராட்டுகிறோம். அதே வேளையில், எந்த நிலையிலும் தனது நோக்கத்திலும் செயலிலும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடம் தராமல், தவறுகள் குறைபாடுகள் ஏற்படின் அவற்றை களைந்து தொடர்ந்து செயல்பட வலியுருத்துகிறோம்.

No comments: