Saturday, December 27, 2008

அப்பாவி இலங்கைத் தமிழர்க்ள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்


அப்பாவி இலங்கைத் தமிழர்க்ள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் :24.10.2008, வெள்ளி, மாலை 0600 மணி
இடம் :இலங்கை தமிழ்த்தியாகிகள் நினைவு அரங்கம், கூடல்நகர் (மிர்காப்)

குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து, இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் இனவெறி அரசு நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் “இலங்கை தமிழ் தியாகிகள் அரங்கில்” நடந்தது.

இக்கூட்டத்திற்கு குவைத் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்க, தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன், விடுதலைச் சிறுத்தைகளின் இணைச் செயலாளர் அழ.பாண்டிச்செல்வன், தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கும், தமிழ் தியாகிகளுக்கும் அஞ்சலி தெரிவித்து ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர் சமூகநீதி பேரவையின் தலைவர் தமிழ்நாடன் அவர்கள் தொடக்க உரையாற்றி கண்டனக் கூட்டத்தை தொடங்கி வைத்ததோடு, நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள்.

அடுத்ததாக பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகிகள் தங்களது கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

முதலாவதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் குவைத் அமைப்பாளர் தோழர்.முகமது இக்பால் அவர்களும், அடுத்ததாக பெரியார் நூலகம் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர்.செல்லப்பெருமாள் அவர்களும், தொடர்ந்து, பெரியாரியலாளர் தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக முன்னிலை வகித்த விடுதலை சிறுத்தைகளின் இணைச் செயலாளர் தோழர்.அழ.பாண்டிச்செல்வம் அவர்கள் கண்டண உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, பாலைக்குயில்கள் கவிஞர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் வளநாடன் அவர்களும், தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர். இரா.க.சரவணன் அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில் அதன் பொருளாளர் தோழர். அறிவழகன் அவர்களும், தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் அவர்களும், தமிழ் இசுலாமிய மாணவர் பேரவையின் தலைவர் க.இரகமத்துல்லா அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக, இக்கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் முன்மொழிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து தலைமையுரை தொடங்க வேண்டிய நிலையில் கூட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய விழைந்ததால் கண்டன உரைகள் தொடர்ந்தன.

முதலாவதாக, தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தார்கள். அடுத்ததாக, தோழர்.நெல்லை முத்துவேல் அவர்கள் தனது கண்டனக் கவிதை வாசித்தார்கள்.

அதையடுத்து, சிங்கள இனவெறி அரசிற்கு இந்தியா அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமெனவும், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரும் “இந்திய அரசுக்கு குவைத் வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள்” விடுக்கும் கையெழுத்து இயக்கத்தை தோழர்.இராசு பூபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, தமிழோசை கவிஞர் மன்றத்தின் தலைவர் தோழர். சாதிக் பாட்சா அவர்களும், தமிழர் சமூகநீதி பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் அவர்களும் தங்களது கண்டன உரையினை நிகழ்த்த தோழர்.சிவமணி அவர்கள் தனது கண்டனக் கவிதையை வாசித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றி, கூட்டத் தலைவர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தனது தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் போது, ஈழத் தமிழர்கள் போரினால் பாதிக்கப்படதை விளக்கும் படங்கள் அரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அதே போன்று போரினால் ஏற்பட்ட பதிப்புக்களை விளக்கும் குறுந்தகடு ஒன்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய கண்டனக் கூட்டத்தின் தீர்மாங்களும், கையெழுத்து இயக்க படிகளும் அ.நா சபைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், தமிழக அரசு, ஊடகங்கள் பிற அனைத்துலக அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்போடு கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டமனது, குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் முதன் முறையாக ஒன்றிணைந்து நடத்தினர். அவ்வமைப்பினரும், பொது மக்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த இன உணர்வோடு கலந்து கொண்டதோடு, சிங்கள இனவெறி தாக்குதல்களை கண்டித்ததோடு, இந்தியா செய்து வரும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டுமெனவும், தமிழகத்தில் அரசியல் கட்சியினரும் பிற இயங்கங்களும் ஒத்தக் கருத்தோடு ஈழப் போராட்டம் வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


தீர்மானங்கள்:

இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருவதோடு, உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் அளிக்க மறுப்பதோடு, செஞ்சிலுவை சங்கம், அய்க்கியநாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புக்கள், பிற நாடுகளின் உதவியையும் கூட தமிழர்கள் பகுதிக்கு அனுப்பாமல் தங்கள் நாட்டின் குடிமக்களையே அழித்து வரும் “சிங்கள இன வெறி” அரசை வன்மையாக கண்டிப்பதோடு, அவர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வலியுறுத்துகிறோம். தமிழர்கள் பகுதியில் வாழ்ந்துவரும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான உணவு பொருட்களை அனுப்பியும், மருத்துவ உதவிகளை செய்தும் அவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்துகிறோம்.

1983ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியைப் போன்று, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சிக்கு காரண்மான, தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் அதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து தங்கள் இன உணர்வினை வெளிப்படுத்தி வரும் வழக்குறைஞர்கள், மாணவர்கள், திரைத்துறையினர், மருத்துவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எங்களின் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தொடக்கம் முதலே தமிழ்ர்களுக்கு எதிராகவும், இலங்கை சிங்கள இனவெறி அரசிற்கு ஆதரவாகவும் பேசியும் செயல்பட்டும் வருகிற பார்ப்பன கும்பல்களான இந்து ராம், செயலலிதா, துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி ஆகியோரை கண்டிப்பதோடு, ஈழத்தமிழர்களின் போராட்டங்களை இழித்தும், கொச்சைப்படுத்தியும் பேசி வருகிற பார்ப்பன அடிவருடி தமிழர்கள், இந்தியர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அண்டை நாடுகளில் நடைபெறும் உரிமை மீறல்கள், இராணுவ நடவடிக்கைகள், பிற நாடுகளுடணான உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கடமையும், இந்திய துணைக்கண்ட பிரதேசத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டிய கடமையும், இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும், அமைதியான வாழ்வும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டிய கடமையும் இந்தியவிற்கு உண்டு. எனவே, இதற்கான முன்முயற்சியினை மேற்கொண்டு இலங்கையில் அமைதி நிலவவும், இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் பதுகப்புடனும் வாழ வழிசெய்யுமாறு இந்திய அரசாங்கத்தினை இத்தீர்மானம் கேட்டுக்கொள்வதோடு, இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்தக் கோருகிறோம்.

இந்திய இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, கொலை செய்வதும், கைது செய்வதையும் இலங்கை நிறுத்த வேண்டும். இம்மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தி வரும் அத்துமீறல்களை தடுத்துப்பதோடு, இவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து இக்கடற்பகுதிகளில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ஒப்பத்தங்களை இலங்கை அரசுடன் ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசு, அய்க்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம், பிற உதவி செய்யும் நாடுகள் ஆகிய அனைவரும் ஒருமித்த குரலில், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோருவதோடு, இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.


(இந்நிகழ்வு பற்றிய செய்தி தமீழீழ வானொலியில் 27.10.08 அன்று ஒலிபரப்பப் பட்டது(புலிகளில் குரல் இணையதளத்தில் கேட்கலாம்). அதே போன்று பல்வேறு இணையதளங்களிலும் தினகுரல் நாளிதழிலும் வெளிவந்தது).

பேராசிரியர்.பெரியார்தாசன், தோழர்.அழகரசன் நிகழ்ச்சி


பெரியார் திராவிடர் கழக தலைவர்கள் தோழர்.பேரா.பெரியார்தாசன் அவர்களும், தோழர்.கடலூர் அழகரசன் அவர்களும் அண்மையில் குவைத்திற்கு வருகைபுரிந்தனர்.
தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் அழைப்பின் பேரில் தோழர்.பெரியார்தாசனும், அவரோடு இணைந்து சொந்த விருப்பத்தின் பேரிலும், தோழர்.வடலூர் ஆறுமுகத்தின் ஆதரவிலும் தோழர்.அழகரசனும் வந்திருந்தனர். இப்பயணத்தின் போது இவர்களிருவரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், தமிழோசை கவிஞர் மன்றம், பெரியார் நூலகம், மற்றும் நமது தமிழர் சமூகநீதி பேரவையின் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
01.09.08 அன்று மாலை குவைத் வந்தடைந்த இவர்களை இவ்வமைப்பினர் அனைவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
02.09.08 அன்று தமிழ்நாடு பொறியாளர் குழும நிகழ்ச்சியிலும்,
03.09.08 அன்று காலை தமிழோசை கவிஞர் மன்ற கூட்டத்திலும் பங்கேற்றப்பின்னர்,
03.09.08 அன்று வெள்ளிக்கிழமை மாலை, மிர்காப் தஞ்சை உணவகத்தில் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாடினார். இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் வரவேற்றார்.
இதையடுத்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் "இணைந்தோம் உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்" என்ற பாடலை பாடினார். அடுத்ததாக, முன்னிலை வகித்த தோழர். வளநாடன் அவர்கள் உரையாற்றினார், பின்னர் தோழர்.சுப்பிரமணியன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார்.
அவரைத் தொடர்ந்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்கள் உரையாற்ற, தோழர். இராமகிருட்டிணன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார். இதையடுத்து தொழர்.சரவணன் அவர்கள் தான் இயற்றிய பெரியார் பற்றிய கவிதயை படித்தப் பின்னர் தலைமையுரையாற்றினார்கள்.
அதயடுத்து, பொறியாளர் முத்துக்குமார் அவர்கள் த.ச.பேரவையின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 என்ற தமிழக அரசால் வெளியிடப்பட்ட கையேட்டினை வெளியிட தோழர்கள் பெரியார்தாசனும் அழகரசனும் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து தோழர்.கடலூர்.அழகரசன் அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்து தோழர்.செந்தில்குமார் ஒரு எழுச்சிப் பாடலை பாடினார். நிறைவாக தோழர்.பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் உரையாற்றினார்கள்.
அடித்ததாக, விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தோழர்கள் .தமிழ்நாடன், அனவர் அலி, இரா.க.சரவணன், நாஞ்சில் சுரேசு ஆகியோர் தொழர்கள். அழகரசன், பெரியார்தாசன் இருவருக்கும் நினைவுப்பரிசினை வழங்கினர். இதயடுத்து, இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர். மரு.அன்வர் பாட்சா அவர்களும், தோழர்.முபாரக் ரசுவி அவர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.
தமிழ்.காம் இதழின் சார்பில் தோழர். லுக்மான் அவர்கள் பேரா.பெரியார்தாசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்கள்.
ஓவியர். கொண்டல்ராசு அவர்கள், நிகழ்ச்சியினிடையே தோழர் அழகரசன் அவர்களை ஓவியமாக வரைந்து பரிசளித்தார்கள்.
விருந்தினர்களோடு அனவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, இரவு உணவையும் முடிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

பெரியார் பிறந்தநாள் விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்:

பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, உலகில் அனைவரும் பயன்பெற வழிவகை செய்ய தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தமிழக அரசின் சார்பில் தொகுத்து ஒரே தொகுப்பாக வெளியிட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இத்தொகுப்பின் மலிவு விலையில் வெளியிடுவதோடு மின்னூல் வடிவத்திலும் வெளியிடவேண்டும்.

பெரியார் பயன்படுத்திய உடைமைகள் அனைத்தையும் அரசு தன் பொறுப்பில் எடுத்து, தனி ஒரு கண்காட்சி கூடமும் நினைவகமும் ஏற்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

மதசார்பற்ற அரசு சனநாயக அரசு என்றெல்லாம் கூறிக்கொள்ளும் இந்தியாவில், தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், சிறுபான்மையினரின் வாழ்விற்கான அச்சுறுத்தல்கள் தொடர்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சாதாரன, சிறுபான்மை, பிந்தங்கிய மக்களுக்கு எதிரான கொடுமைகளை நாட்டின் முதன்மைப் பிரச்சனையாக கருதி குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நேரடியாக தலையிட்டு அம்மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்பை ஈடுகட்டுவதோடு அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்மொழி மீட்டுருவாக்கம், தமிழர் நலம், தமிழர் பண்பாடு போன்றவற்றை முன்னிருத்தி பிற தொலைக்காட்சிகளைப் போன்று தமிழர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லாமல், மண் பயனுற வேண்டும் என்ற நோக்கிலே தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் தொலைக்காட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றதை பாராட்டுகிறோம். அதே வேளையில், எந்த நிலையிலும் தனது நோக்கத்திலும் செயலிலும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடம் தராமல், தவறுகள் குறைபாடுகள் ஏற்படின் அவற்றை களைந்து தொடர்ந்து செயல்பட வலியுருத்துகிறோம்.

தமிழர் சமூகநீதி பேரவையின் சின்னம்


Tuesday, November 4, 2008

பெரியார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்


தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா 06.09.08 அன்று "சமூகநீதி போராளி தந்தை பெரியார்" அரங்கில் (இந்தியன் முகலாய் உணவகம், பாகீல்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

த.ச.பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் வரவேற்புரை ஆற்றினார்கள். எழுத்தாளர் வளநாடன் தலைமையேற்க, த.ச.பேரவையின் இணைச்செயலாளர் க.இரகமத்துல்லா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நிலவனும் பட்டுக்கோட்டை சத்யாவும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அதைத் தொடர்ந்து, க.இரகமத்துல்லா அவர்கள் த.ச.பேரவையின் சின்னத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.

அவரைத்தொடர்ந்து வடலூர் ஆறுமுகம் அவர்கள் பெரியார் சிறப்புக்களை விளக்கும் விதமாக உரையாற்றினார்.

அடுத்ததாக, இரா.க.சரவணன் அவர்கள் த.ச.பேரவையின் கொள்கை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு உரையாற்றினார். கொள்கை விளக்க கையேட்டினை பெற்றுக் கொண்டு பேராசிரியர். தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
பிறகு, உமைரி நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழக தலைவருமாகிய பேராசிரியர், முனைவர். சவாகிருல்லா அவர்களுக்கு த.ச.பேரவையின் தலைவர் தமிழ்நாடன், புலவர்.கருணனந்தம் எழுதிய பெரியார் வரலாற்று நூலை நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சமூகநீதிக் காவலர் பெரியார் என்ற தொகுப்பு நூலை த.ச.பேரவையின் அவைத் தலைவர் அன்வர் அலி வெளியிட, பேரா.முனை. சவாகிருல்லா பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

விழா நிறைவாக த.ச.பேரவையின் பொருளாளர் நாஞ்சில் சுரேசு நன்றியுரை ஆற்றினார்.

முன்னதாக த.ச.பேரவையின் துணைத்தலைவர் வயி.பி.மதியழகன் சிற்றிதழ்கள் கண்காட்சியினையும், த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் பெரியார் ஆவணக் கண்காட்சியினையும் திறந்து வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஏராளமான சிற்றிதழ்களும், பெரியார் நூல்களும், பெரியார் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழாவினை நிலவன் சிறப்பாக தொகுத்தளிக்க இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : பேரா.முனை.சாவாகிருல்லா உரையும், கண்காட்சி விபரங்களும் தனியே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 4, 2008

சிறப்புக்கருத்தரங்கம் - 06.09.08


பேராசிரியர், முனைவர்.ஜவாகிருல்லா கலந்துகொள்ளும் சிறப்புக்கருத்தரங்கம் 06.09.08 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்.

Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்க தீர்மானங்கள்

தீர்மானங்கள்

முதல் அமர்வு: மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்

ஆங்கிலேய அரசை அவர்களிருந்த கோட்டைக்குள்ளேயே எதிர்த்து புரட்சி விதையை விடுதலை உணர்வை முதன் முதலாக விதைத்த “வேலூர் புரட்சியை” தமிழகத்தில் நடைபெற்ற பிற விடுதலைப் போரை போன்றே வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப்படுள்ளதை மாற்றி முறையான வரலாற்றுப் பதிவை செய்திட ஆவண செய்யுமாறு மைய மாநில அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே உலகத்தினருக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டய் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் புரட்சியாளர் “உலக சமூகநீதி காவலர்” நெல்சன் மண்டேலா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாம் அமர்வு: கல்வி முறையும் களவு போகும் உரிமையும், தமிழ் மொழி மீட்டுருவாக்கம்

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தும் தமிழ் வழி மருத்துவப் பாட திட்டங்களையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் செயலுக்குவரும் தமிழ் வழி பொறியியல் பாடத்திட்டத்தினையும் ஆதரித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக தகுதியை தந்து கல்வியை வியாபார தொழிலாக்குவதை கண்டித்தும், அரசே மாவட்டத்தோறும் பல்கலைக்கழகங்களை உருவாக்கிட வலியுருத்தியும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

காமராசரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர் கொண்டுவந்த சென்னை அய்.அய்.டி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அவர் கண்ட கனவை நிறைவேற்றிடும் வகையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியும் மைய, மாநில அரசை வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுத் தீர்மானங்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், கொலை செய்வதையும் கண்டிப்பதோடு, தமிழக அரசும், நடுவண் அரசும் தக்க நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை காத்திட வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடைபெற்ற கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மை நிலையினை மக்கள் முன் விளக்கி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் ஓட்டெடுப்பும் நடத்திய பிறகே மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் முயற்சியால் தரமான இலவச பொதுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் வழங்கவும் நூலகம் ஆயவகம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட “பெரியார் ஈ.வே.இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை”யை வாழ்த்துவதோடு அதன் வளர்ச்சியில் பங்குபெறும் விதமாக அறக்கட்டளை வளர்ச்சி நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி தருவதாகவும் முடிவு செய்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.