Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்க தீர்மானங்கள்

தீர்மானங்கள்

முதல் அமர்வு: மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்

ஆங்கிலேய அரசை அவர்களிருந்த கோட்டைக்குள்ளேயே எதிர்த்து புரட்சி விதையை விடுதலை உணர்வை முதன் முதலாக விதைத்த “வேலூர் புரட்சியை” தமிழகத்தில் நடைபெற்ற பிற விடுதலைப் போரை போன்றே வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப்படுள்ளதை மாற்றி முறையான வரலாற்றுப் பதிவை செய்திட ஆவண செய்யுமாறு மைய மாநில அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே உலகத்தினருக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டய் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் புரட்சியாளர் “உலக சமூகநீதி காவலர்” நெல்சன் மண்டேலா அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாம் அமர்வு: கல்வி முறையும் களவு போகும் உரிமையும், தமிழ் மொழி மீட்டுருவாக்கம்

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தும் தமிழ் வழி மருத்துவப் பாட திட்டங்களையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் செயலுக்குவரும் தமிழ் வழி பொறியியல் பாடத்திட்டத்தினையும் ஆதரித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக தகுதியை தந்து கல்வியை வியாபார தொழிலாக்குவதை கண்டித்தும், அரசே மாவட்டத்தோறும் பல்கலைக்கழகங்களை உருவாக்கிட வலியுருத்தியும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

காமராசரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர் கொண்டுவந்த சென்னை அய்.அய்.டி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அவர் கண்ட கனவை நிறைவேற்றிடும் வகையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியும் மைய, மாநில அரசை வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுத் தீர்மானங்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கண்முடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதையும், கொலை செய்வதையும் கண்டிப்பதோடு, தமிழக அரசும், நடுவண் அரசும் தக்க நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை காத்திட வலியுருத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடைபெற்ற கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மை நிலையினை மக்கள் முன் விளக்கி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் ஓட்டெடுப்பும் நடத்திய பிறகே மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் முயற்சியால் தரமான இலவச பொதுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் வழங்கவும் நூலகம் ஆயவகம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட “பெரியார் ஈ.வே.இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை”யை வாழ்த்துவதோடு அதன் வளர்ச்சியில் பங்குபெறும் விதமாக அறக்கட்டளை வளர்ச்சி நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி தருவதாகவும் முடிவு செய்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

No comments: