புகைக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெங்களூர் வாழ் தமிழர்களை தொடர்ந்து துன்புறுத்தி வரும் கன்னட வெறியர்களை எதிர்த்து கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 1: புகைக்கல் என்ற பொருள் பொதிந்த தமிழ் பெயரை ஒகேனக்கல் என்று கன்னட பெயரில் அழைக்காமல், புகைக்கல் தமிழ் பெயரை அரசு ஆனைமூலம் மாற்றக் கோருகிறோம்.
தீர்மானம் 2: ஃபுளூரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்த குடிநீரை ஆண்டாண்டு காலமாக குடித்து பல்வேறு நோய்களுக்குள்ளான இருபெரும் மாவட்டங்களாகிய “தருமபுரி”, “கிருட்டணகிரி” மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், வெளிநாட்டு உதவியோடும் செயல்படுத்த திட்டமிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை, எவ்வித அடிப்படை நியாயமுமின்றி எதிர்த்தும், தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
தீர்மானம் 3: கன்னட வெறியர்களின் வன்முறையை கண்டிக்காமலும், தடுக்காமலும் கண்மூடி மௌனமாக இருக்கும் மைய அரசு, கர்நாடக மாநில அரசு, கர்நாடக காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதோடல்லாமல், தொடர்புடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவிவிலக வலியுறுத்துகிறோம்.
தீர்மானம் 4: தமிழர்களின் உரிமையையும் உணர்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக, எவ்வித கூடாலோசனையும், நியாயமுமின்றி தன்னிச்சையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த தமிழக முதல்வரை கண்டித்தும், இத்திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உடனடியாக தொடங்க கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 5: இப்பிரச்சனையில் தொடக்கம் முதல் போராடிவரும் தமிழ் அமைப்புக்களையும் கட்சிகளையும் பாராட்டுவதோடு தொடர்ந்து இத்திட்டம் நிறைவேறும்வரை போராடவும் வலியுறுத்துகிறோம்.
தீர்மானம் 6: கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நீண்டகாலமாக பெருமளவு உழைத்துவரும் தமிழர்களை தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அமைதியான வாழ்விற்கும் உறுதியளிக்க வேண்டுமாய் மைய மாநில அரசுகளை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவும் வலியுறுத்துகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment