Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்கம்

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்தமிழ் மொழி மீட்டுருவாக்கம்கல்வி முறை - களவுபோகும் உரிமைசிறப்புக்கருத்தரங்கம் த.ச.பேரவையின் அய்ந்தாவது சிறப்புக்கருத்தரங்கம் கல்வி போராளி காமராசர் அரங்கில் த.ச.பேரவையின் பொருளாலர் நாஞ்சில் சுரேசு வரவேற்புரையோடு துவங்கிற்று.
த.ச.பேரவையின்பொதுச்செயலாளர் இரா.க.சரவணன் தலைமையேற்க, பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினரும் து.செயலாளருமாகிய அன்வர் அலி முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக தோழர் நிலவனும் தொழர் பட்டுக்கோட்டை சத்யாவும் தமிழ்தாய் வாழ்துப்பாடினர். அதைத் தொடர்ந்து முதல் அமர்வான மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் துவக்கமாக தோழர் செந்தில் குமார் "இணைந்தோம் உலகத் தமிழராய் இணைந்தோம் என்ற உலகத் தமிழர் பண் பாடினார்.

த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் உலகபோராளி நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில்எழுச்சிமிக்க கவிதை படித்தார்.

இதையடுத்து த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். கி. திருமுருகன் "தில்லைச் சமரில் வென்றது தமிழ்" என்ற கையேட்டினை வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் தோழர். அழ.பாண்டிச்செல்வம் பெற்றுக் கொண்டார்கள்.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர். மணிவாசகம் அவர்கள் படிக்க அரங்கத்தின் பலத்த கரவொலியோடு நிறைவேற்றபட்டது.முதல் அமைவை நிறைவு செய்யும் விதமாகவும் இரண்டாம் அமர்வை தொடங்கும் விதமாகவும் தோழர் செந்தில் குமார் எழுச்சி மிக்க பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தோழர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் என்ற தலைப்பில்சீரிய உரையாற்றினார்கள். தமது உரையின் போது தமிழ் மொழி சிறக்கவும், தமிழ் மொழி சிறக்கவும் தமிழை மீட்டுருவாக்கம் செய்யவும் மறைமலையடிகள், செய்குத்தம்பி பாவலர், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆற்றிய தொண்டினையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் எடுத்துக் கூறினார்கள்.

தோழர் செந்தில்குமாரின் எழுச்சி மிக பாடலைத் தொடர்ந்துகருத்தரங்க வெளியீடாக தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். அப்துல் கனிவெளியிட இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அமைப்பாளர்மருத்துவர் அன்வர் பாசா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்துப் பேச வந்த த.ச.பேரவையின் தலைவர் தோழர் தமிழ்நாடன் அவர்கள் "கல்வி முறையும் களவு போகும் உரிமையும்" என்றதலைப்பில் இன்றைய கல்வி முறையின் சீர்கேட்டினையும், அதனை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தையும்எடுத்துக் கூறியதோடு தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தையும் விளக்கிக் கூறினார்கள்.

இக்கருத்தரங்கத்தின் சிறப்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முசுலிம் லீக்கின்அமைப்பாளர் தோழர். அன்வர் பாசா அவர்கள், காமராசர்அவர்கள் தமிழகத்திற்கும் தமிழர்களின் கல்விக்கும் ஆற்றியதொண்டினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.

இதையடுத்து தோழர் வித்யாசாகர் அவர்கள் பழங்குடிமக்களின் வாழ்வையும் வேதனைகளையும் தனது கவிதயின்மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை தோழர். நிலவன் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி நிறைவேற்றினர்.

இரண்டாம் அமர்வின் நிறைவாக தோழர் செந்திகுமார் அவர்கள்எழுச்சிமிகு பாடலை பாடினார்கள்.

நிறைவாக தோழர். இரா.க.சரவணன் கருத்தரங்கத்தின் பொதுத்தீர்மானங்களை நிறைவேற்றி, கறுப்பு சூலை, அணுசக்தி உடன்பாடு உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளை குறித்து சிறப்புர விளக்கி தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிற்றுண்டியும் கருத்தரங்க வெளியீடுகளும்வழங்கப்பட்டது.

தோழர் அன்வர் அலியின் நன்றியுரையோடு நிகழ்ச்சிகள் இனிதேநிறைவுற்றது.

Monday, July 14, 2008

சிந்தனையாளனில் தமிழர் சமூகநீதி பேரவை நிகழ்ச்சி தொகுப்பு


நன்றி : சிந்தனையாளன் சூலை -2008

பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "சிந்தனையாளன்" சூலை-2008 இதழில் தமிழர் சமூகநீதி பேரவையின் முதல் மூன்று கருத்தரங்கங்களின் நிகழ்ச்சி தொகுப்பை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Tuesday, July 1, 2008

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை - சிறப்புக்கருத்தரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை

இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம்
நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008)

தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் “உலக சுற்றுச்சூழல் நாள்”, ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா., தியாகி விசுவநாத தாசு, காயிதே மில்லத், கக்கன் ஆகியோரின் பிறந்தநாள், பெருஞ்சித்தரனார் நினைவு நாள், நெல்ல எழுச்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை நினைவுகூறும் விதமாக, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற சிறப்புக் கருத்தரங்கத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று, கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க த.ச.பேரவையின் து.செயலர் தோழர் நிலவன் அவர்களையும் முன்னிலை வகிக்க த.ச.பேரவையின் ஆலோசகர் தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்களையும், சிறப்பு அழைப்பாளராகவும் கருத்தரங்கத்திற்கு சிறப்புரையாற்றவும் பொறிஞர்.இளங்கோவன் அவர்களையும் மேடைக்கு அழைத்தார் த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள்.

தலைமையேற்ற தோழர் நிலவன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கத்தையும், அரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்த்தலைவர்களின் சிறப்புக்களையும் கூறி முதல் அமர்வின் முதல் பேச்சாளராகப் பேச த.ச.பேரவையின் து.தலைவர் தோழர் வயி.பி.மதியழகன் அவர்களை அழைத்தார்கள்.

தோழர் வயி.பி.மதியழகன் தனது உரையில், ஊமைத்துரையின் போராட்ட வரலாற்றைக் கூறி அவை இந்திய விடுதலைபோரில் அவை சரியாகப் பதிவு செய்யப்படாததையும், அதற்கு தமிழர்களும், தமிழக அரசும் முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். அடுத்து வ.உ.சியின் ஆங்கில அரசு எதிப்பு போராட்டத்தினையும் தியாகி விசுவநாத தாசின் சிறப்புக்களையும் விரிவாக எடுத்துக் கூறி இச்செய்திகளை பகிர்ந்து கொள்வதின் நோக்கத்தையும், அவற்றை நாம் உள்வாங்கி செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கூறி விடைபெற்றார்கள்.

இதைத் தொடர்ந்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய "உலகத் தமிழர் பண்" பாடலை எழுச்சியோடு பாடினார்கள்.

அடுத்த பேச வந்த த.ச.பேரவையின் பொ.செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் அவர்கள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டத்தையும் கக்கன் அவர்களின் தூய்மையான அரசியல் வாழ்வினையும் விளக்கிக் கூறினார்கள்.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் தமிழ்ப்பணிகளையும், அரசியல் சிறப்புக்களையும் த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். அமானுல்லா அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அரசியல் ஆளுமைகள் குறித்த கையேட்டினை த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இதையடுத்து தோழர்.இராமகிருட்டினன் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட, தோழர். பழ.கிருட்டிணமூர்த்தியின் முன்னிலை உரையோடு முதல் அமர்வு நிறைவுற்றது.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர்.இரா.க.சரவணன் அவர்கள் படிக்க பலத்த கரவொலி எழுப்பி அரங்கத்தினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றினர்.
அரசியல் ஆளுமைகள் ஒரு வரலாற்றுப்பார்வை அமர்வின் தீர்மானங்கள்:
1. தமிழகத்தின் பரவலான இடங்களில் வரலாற்று ஆளுமைகளுக்கு
மணிமண்டபங்கள் எழுப்பி அவற்றுள் நூலகங்கள், உடற்பயிற்ச்சிக்கூடம்,
கண்காட்சிக்கூடங்களை ஏற்படுத்தி அவைகளை இளம் தலைமுறை
பயனுறும் விதமாக சமுதாய நலக்கூடங்களாக உருவாக்க வேண்டும்.

2. வரலாற்று நாயகர்களின் பணிகளையும் சிறப்பியல்களையும் உள்ளடக்கிய
வாழக்கை வரலாற்று நூல்களை தமிழக அரசின் சார்பில் வெளியிட்டு,
தமிழர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும். இவற்றை
மென்னூலாக்கி இணைதளத்திலும் வெளியிட தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

3. தமிழ் மொழி இனப் போராளிகளின் பெயரில் அனைத்து பள்ளி,
கல்லூரிகளிலும் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி பேச்சுப் போட்டி,
கட்டுரைப்போட்டிகள் போன்றவற்றை ஆண்டுதோறும் நடத்தி
பரிசுகள் வழங்கி மாணவர்களிடத்தில் மொழி, இன உணர்வை
வளர்க்க தமிழக அரசினை இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

4. வறிய நிலையில் வாடும் தமிழறிஞர்கள், மொழிப்போராளிகளின்
குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
எண்ணிக்கைக்கேற்ப திங்கள் தோறும் உரூபா. 10, 000/ மும்
அதற்கு மேலும் தமிழக அரசு வங்கவேண்டும். அதே போன்று
இவர்களின் மருத்துவ செலவுகளையும் கல்விச் செலவுகளையும்,
வேலை வாய்பினையும் வழங்க வேண்டுமாய் தமிழக அரசினை
வலியுருத்துகிறோம்.

5.கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வினையும், எரிபொருள்
உயர்வினையும் கட்டுப்படித்தி ஏழைகளின் குறைந்த அளவு வாழ்வியல்
தேவைகளை உறுதிப்படுத்திட வேண்டுமாய் மைய மாநில அரசினை
வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


இரண்டாம் அமர்வின் தொடக்கமாக "Hell for leather" என்ற ஆவணப்படத்தை தோழர்.சித்தார்த் அவர்கள் திரையிட்டு அது கூறும் சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளையும், அதன் பாதிப்புக்களையும் விளக்கி "யாதும் ஊரே, யாதும் கேளீர்" என்ற மொழியக் கேட்டுக்கொண்ட தேவதேவனையும் மேற்கோள் காட்டினார்கள்.

இதையடுத்து சுற்றுச்சூழல் குறித்த கையேட்டினை தோழர்.தமிழ்நாடன் வெளியிட பொறிஞர்.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர்.சுகந்த் பிரியதாசன் அவர்களின் கவிதையைத் தொடர்ந்து,பேச வந்த தோழர்.தமிழ்நாடன் அவர்கள், சுற்றுச்சூழல் தினம் அய்க்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத் துறையின் சார்பாக கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், அது சார்ந்து செயல்படும் தமிழர்களை அறிமுகப்படுத்தி அதே போன்று நாம் அனைவரும் செயல்படக் கேட்டுக்கொண்டார்கள். அதையடுத்து சுற்றுச்சூழல்நாள் உறுதிமொழியினை படிக்க அரங்கத்தினர் அனைவரும் உடன் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கும் வழிமுறைகளையும் கூறி தனது உரையை முடித்துக்கொள்ள, இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை த.ச.பேரவையின் து.பொருளாலரும், செயற்குழு உறுப்பினருமான தோழர். முனு.சிவசங்கரன் அவர்கள் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமர்வின் தீர்மானங்கள்:
1. தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டினை குறைத்தும், சுற்றுச்சூழல்
மாசுபடுத்தும் காரணிகளை தடுத்தும் வளமான எதிர்காலத்தை
உருவாக்கப் பாடுபடுவோம்.

2. மரம் வளர்க்கவும், காடு, மலை, ஆறுகள் உள்ளிட்ட இயற்கை
வளங்களைப் பேணிப் பாதுகாக்கவும் உறுதியெடுப்போம்.

3. மரபுசாரா எரிசக்திகளான சூரியஒளி, காற்று, சாண எரிவாயு
போன்றவற்றை இயன்ற அளவில் அதிகமாக பயன்படுத்த
உறுதி ஏற்ப்போம்.

4. தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் பணிகளைச் செய்திட
உறுதியெடுப்போம்.

5. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் அனைத்து
நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவோம்.

நிறைவாக சிறப்புரையாற்ற வந்த பொறிஞர். இளங்கோவன் அவர்கள், தமிழர் சமூகநீதி பேரவையின் செயல்பாடுகளைப் பாராட்டி அது செயல்பட வேண்டியப் பாதையையும், அதற்கான தேவையையும் கூறினார்கள். அதே போன்று இன்றைய நிகழ்வினையும் விரிவாக ஆய்ந்து அதன் சிறப்புக்களைக்கூறி அதற்காக தமது பாராட்டுதலையும் ஆதரவினையும் வழங்கினார்கள். தனது உரையின் போது தமிழகத்தில் கல்விக்கென வாடும் ஏழைச்சிறுவர்களுக்கு தாம் செய்து வரும் தொண்டினையும், அதைக் கண்டு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்களது பொருளுதவினை நல்கி ஆதரிப்பதையும் கூறி, தமிழ்ச்சமூகம் இன்றளவும் பெரும் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் அதற்கென வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்ற தமிழர்கள் உதவிட வேண்டியதன் அவசியத்தைகூறி அதற்காக தாம் ஒரு பாலமாக இருந்து செயல்படப் போவதாகவும் கூறினார்கள்.

கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தோழர்.செந்திகுமார் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட அனைவருக்கும் சிற்றுண்டி பறிமாறியபின் தோழர்.நாஞ்சில் சுரேசு நன்றி உரையாற்ற
விழா இனிதே நிறைவுற்றது.

Sunday, April 27, 2008

மறுக்கப்படும் தமிழர் உரிமை (புகைக்கல் குடிநீர் திட்டம்) - கருத்தரங்கம்

தமிழர் சமூகநீதி பேரவையின் மூன்றாவது சிறப்புக்கருத்தரங்கமாகிய "மறுக்கப்படும் தமிழர் உரிமை" புகைக்கல் குடிநீர் திட்டத்திறக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து 24-04-2008 அன்று "பாவேந்தர்" அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது கூட்டத்திற்கு வந்திருந்தோரை த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர்.அமானுல்லா வரவேற்க, விடுதலை சிறுத்தைகள் பொருலாளர் தோழர்.அறிவழகன் முன்னிலையில், த.ச.பேரவையின் பொதுச்செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் தலைமையேற்று நடத்தினார்கள்.

இச்சிறப்புக்கருத்தரங்கத்திற்கு முன்னிலை வகித்த தோழர்.அறிவழகன், காவிரிப் பிரச்சனையில் நாம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.வயி.பி.மதியழகன் அவர்கள் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் சிறப்புக்களை கூறி, அண்ணலின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய சிறு கையேட்டை வெளியிட த.ச.பேரவையின் து.செயலாளர் தோழர்.நிலவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து தோழர்.செந்தில் அவர்கள் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் "தமிழா நீ பேசுவது தமிழா" என்ற படலை உணர்ச்சி பொங்க பாடினார்கள்.

த.ச.பேரவையின் து.தலைவர் தோழர்.மரு.நலிமுதின் அவர்கள் பாவேந்தர் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட தோழர் செந்தில் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மரு.நலிமுதின் தனது உரையினிடையே பாவேந்தரின் சிறப்புக்களைக்கூறினார்கள்.

அடுத்து, தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாவேந்தரின் பெருமைகளை எடுத்துக்கூறி பாவேந்தரின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட தோழர்.இரகுமான் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

த.ச.பேரவையின் செயலர் தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் தோழர்.லெனின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய கையேட்டினை வெளியிட விடுதலை சிறுத்தைகளின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக்கொண்டு கன்னடர்களாலும் அரசியல்வாதிகளாலும் எவ்வாறெல்லாம் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கினார்கள்.

இதை அடுத்து "மறுக்கப்படும் தமிழர் உரிமைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் காவிரிப் பிரச்சனையிலும் அதைத்தொடர்ந்து தற்போது புகைக்கல் குடிநீர் திட்டத்திலும், கருநாடக வெறியர்களாலும் கருநாடக அரசினாலும், மைய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதையும் கருநாகவாழ் தமிழர்கள் உடமைக்கும், உயிருக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் கண்டித்தார்கள். இப்பிரச்சனையில் மைய மாநில அரசுகளின் நியாயமற்ற போக்கினை விளக்கி, இப்பிரச்சனைக்கு விரைவாகவும், நியாயமான முறையிலும் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.

த.ச.பேரவையின் து.பொருளாலர் தோழர்.சிவசங்கரன் அவர்கள் பாபாசாகிப் அவர்களை நினைவுகூறும் வகையில் உணர்ச்சிகரமான கவிதை பாடினார்கள்.
காவிரிப்பிரச்சனையில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதையும் அதன் வரலாற்றையும் விளக்கும் கவிதையை தோழர்.நிலவன் அவர்கள் எழுச்சியுற பாடைனார்கள்.

கருத்தரங்க தீர்மானமாக த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள் கீழ்கண்ட தீர்மானங்களை முன்மொழிய, அரங்கத்தின் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானம் 1: புகைக்கல் என்ற பொருள் பொதிந்த தமிழ் பெயரை ஒகேனக்கல் என்று கன்னட பெயரில் அழைக்காமல், புகைக்கல் தமிழ் பெயரை அரசு ஆனைமூலம் மாற்றக் கோருகிறோம்.

தீர்மானம் 2: ஃபுளூரைடு என்ற வேதிப்பொருள் நிறைந்த குடிநீரை ஆண்டாண்டு காலமாக குடித்து பல்வேறு நோய்களுக்குள்ளான இருபெரும் மாவட்டங்களாகிய “தருமபுரி”, “கிருட்டணகிரி” மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், வெளிநாட்டு உதவியோடும் செயல்படுத்த திட்டமிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை, எவ்வித அடிப்படை நியாயமுமின்றி
எதிர்த்தும், தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட
வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீர்மானம் 3: கன்னட வெறியர்களின் வன்முறையை கண்டிக்காமலும், தடுக்காமலும் கண்மூடி மௌனமாக இருக்கும் மைய அரசு, கர்நாடக மாநில அரசு, கர்நாடக காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதோடல்லாமல், தொடர்புடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவிவிலக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 4: தமிழர்களின் உரிமையையும் உணர்வையும் கொச்சைப்படுத்தும் விதமாக, எவ்வித கூடாலோசனையும், நியாயமுமின்றி தன்னிச்சையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த தமிழக முதல்வரை கண்டித்தும், இத்திட்டத்தினை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உடனடியாக தொடங்க கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 5: இப்பிரச்சனையில் தொடக்கம் முதல் போராடிவரும் தமிழ்
அமைப்புக்களையும் கட்சிகளையும் பாராட்டுவதோடு தொடர்ந்து இத்திட்டம்
நிறைவேறும்வரை போராடவும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 6: கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நீண்டகாலமாக பெருமளவு உழைத்துவரும் தமிழர்களை தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அமைதியான வாழ்விற்கும் உறுதியளிக்க வேண்டுமாய் மைய மாநில
அரசுகளை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யவும் வலியுறுத்துகிறோம்.

அடுத்ததாக, கருத்தரங்க தலைவர்.தோழர்.இரா.க.சரவணன் அவர்களின் எழுச்சிமிகு உரைக்குப்பின் த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக தோழர்.செந்தில் அவர்களின் எழுச்சிமிகு பாடல் ஒலிக்க, கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்தேசப்பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசனின் "காவிரித்தீர்ப்பும் களவுபோன உரிமையும்" என்ற கட்டுரையும், புகைக்கல் குடிநீர் திட்ட விளக்கக் கட்டுரையும், பாபாசாகேப்பின் இரு உரைகள், சித்திரை-04 திகதி "தென் செய்தி" இதழும், கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.